ஜெனரேட்டிவ் AI - தடைசெய்யப்பட்ட பயன்பாட்டு கொள்கை

கடைசியாக மாற்றியது: 17 டிசம்பர், 2024

ஆராயவும், கற்றுக்கொள்ளவும், உருவாக்கவும் ஜெனரேட்டிவ் AI மாடல்கள் உங்களுக்கு உதவலாம். அவற்றை நீங்கள் பொறுப்பாகவும் சட்டப்பூர்வமாகவும் பாதுகாப்பாகவும் அணுக வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இந்தக் கொள்கையைக் குறிப்பிடும் Google தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் ஜெனரேட்டிவ் AI உடனான உங்கள் உரையாடல்களுக்கு, பின்வரும் கட்டுப்பாடுகள் பொருந்தும்.

  1. ஆபத்தான, சட்டவிரோதமான செயல்பாடுகளிலோ பொருந்தக்கூடிய சட்டம் அல்லது ஒழுங்குமுறைகளை மீறும் செயல்பாடுகளிலோ ஈடுபடக்கூடாது. இவை போன்ற உள்ளடக்கத்தை உருவாக்குவதும் விநியோகிப்பதும் இதில் அடங்கும்:
    1. சிறார் பாலியல் வன்கொடுமை அல்லது அவர்களைத் தவறாகப் பயன்படுத்துதல் தொடர்பானவை.
    2. கொடூரமான தீவிரவாதம் அல்லது பயங்கரவாதத்தை ஆதரிப்பவை.
    3. அனுமதியளிக்கப்படாத அந்தரங்கப் படத்தை ஆதரிப்பவை.
    4. தன்னைத்தானே காயப்படுத்துதலை ஆதரிப்பவை.
    5. சட்டவிரோத அல்லது விற்பனை கட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள், தயாரிப்புகள், சேவைகள் ஆகியவற்றை உருவாக்குவதற்கோ அணுகுவதற்கோ வழிகாட்டுதல்களை வழங்குதல் போன்ற சட்டவிரோதமான செயல்பாடுகளையோ சட்ட மீறல்களையோ ஆதரிப்பவை.
    6. சட்டப்பூர்வத் தேவைக்கான ஒப்புதல் இல்லாமல் தனிப்பட்ட தரவையோ பயோமெட்ரிக்ஸையோ பயன்படுத்துதல் போன்ற, தனியுரிமை மற்றும் அறிவுசார் சொத்துரிமைகள் உள்ளிட்ட பிறரின் உரிமைகளை மீறுபவை.
    7. நபர்களின் ஒப்புதல் இல்லாமல் அவர்களை டிராக் செய்வது அல்லது கண்காணிப்பது.
    8. வேலைவாய்ப்பு, உடல் ஆரோக்கியம், நிதி, சட்டம், வீட்டு வசதி, காப்பீடு, சமூக நலம் போன்ற அதிக ஆபத்துள்ள இடங்களில் மனித மேற்பார்வை இல்லாமல், தனிப்பட்ட உரிமைகள் மீது தீங்கான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தானியங்கு முடிவுகளை எடுப்பது.
  2. பிறரின் அல்லது Google சேவைகளின் பாதுகாப்பில் சமரசம் செய்யக்கூடாது. இவற்றை ஆதரிக்கும் உள்ளடக்கத்தை உருவாக்குவதும் விநியோகிப்பதும் இதில் அடங்கும்:
    1. ஸ்பேம், ஃபிஷிங் அல்லது மால்வேர்.
    2. Google/பிறரின் உள்கட்டமைப்பு அல்லது சேவைகளைத் தவறாகப் பயன்படுத்துதல், தீங்கிழைத்தல், குறுக்கிடுதல், சிக்கல்களை ஏற்படுத்துதல்.
    3. தவறான பயன்பாட்டிற்கு எதிரான பாதுகாப்புகள் அல்லது பாதுகாப்பு ஃபில்டர்கள் என்று ஏமாற்றுதல் -- உதாரணமாக, மாடலை எங்கள் கொள்கைகளுக்கு எதிராக மாற்றுதல்.
  3. வெளிப்படையான பாலியல், வன்முறை, வெறுப்பைத் தூண்டக்கூடிய அல்லது தீங்கிழைக்கும் செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது. இவற்றை ஆதரிக்கும் உள்ளடக்கத்தை உருவாக்குவதும் விநியோகிப்பதும் இதில் அடங்கும்:
    1. வெறுப்பைத் தூண்டும் அல்லது வெறுப்புப் பேச்சு.
    2. பிறரை உபத்திரவம் செய்தல், மிரட்டுதல், பயமுறுத்துதல், தவறாகப் பயன்படுத்துதல் அல்லது இழிவுபடுத்துதல்.
    3. வன்முறை அல்லது வன்முறையைத் தூண்டக்கூடியவை.
    4. ஆபாசம் அல்லது பாலியல் இச்சையைத் தூண்டும் நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் போன்ற வெளிப்படையான பாலியல் உள்ளடக்கம்.
  4. தவறான தகவல், தவறான பிரதிநிதித்துவம், தவறாக வழிநடத்துதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது. இதில் அடங்குபவை:
    1. மோசடிகள், ஸ்கேம்கள், பிற ஏமாற்றக்கூடிய செயல்கள்.
    2. ஏமாற்றுவதற்காக, வெளிப்படையாகத் தெரிவிக்காமல் பிறரைப் போன்று (உயிருடன் இருப்பவர் அல்லது இறந்தவர்) ஆள்மாறாட்டம் செய்தல்.
    3. ஏமாற்றும் நோக்கில் ஆரோக்கியம், நிதி, அரசுச் சேவைகள் அல்லது சட்டம் போன்ற உணர்வுப்பூர்வமான விஷயங்களில் அனுபவம் அல்லது திறமை தொடர்பான தவறான வாக்குறுதிகளை ஆதரிப்பவை.
    4. ஏமாற்றும் நோக்கில் அரசு அல்லது ஜனநாயகச் செயல்முறைகள் தொடர்பான தவறான கூற்றுகள் அல்லது தீங்கு விளைவிக்கும் உடல்நலப் பழக்கங்களை ஆதரிப்பவை.
    5. உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் மனிதரால் மட்டுமே உருவாக்கப்பட்டது என்று ஏமாற்றும் நோக்கில் தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்துதல்.

கல்வி, ஆவணப்படம், அறிவியல், கலை போன்ற காரணங்களின் அடிப்படையில் அல்லது பொதுமக்களுக்குக் கிடைக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகள் ஆபத்துகளைவிட அதிகமாக இருக்கும்பட்சத்தில் நாங்கள் இந்தக் கொள்கைகளுக்கு விதிவிலக்குகளை அளிக்கக்கூடும்.
Google ஆப்ஸ்
முதன்மை மெனு